ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது; நடக்கவும் சிரமப் பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.
எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார். கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார்.
கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர்.
ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது.
தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்ல்லை.ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.
தன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.
மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர்.தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது.
தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.
மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.
No comments:
Post a Comment