Sunday, April 15, 2012

அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே... [Amma Inaikku School-la]


“அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே.. .”
குழந்தை மாயா சொல்ல வந்த போது. ..
அம்மாவுக்கு சமையல் வேலை,
அப்பா பேப்பரில் பிசி,
அக்காவுக்கு நாவல் சுவாரசியம்
கடைசியில்
டெலிபோன் வந்தபோது.. .
ஸ்கூலில் என்னதான் நடந்தது ?
குழந்தை வாயால் கேட்க மூவருமே காத்திருந்தனர்.
முத்து முத்தாக முகத்தில் வியர்வை தளிர்க்க, ரவிக்கை கசகசக்க, அவசரம் அவசரமாக இரவுச் சமயலை முடிக்கப் போராடிக் கொண்டிருந்தாள் புனிதா. அவள் பின்னால் வந்து புடவையைப் பிடித்தபடி நின்றாள் மாயா. புனிதா திரும்பவில்லை. குழந்தை மாயா புடவையை லேசாக இழுத்தாள்.  அவளுக்கு அதைக் கவனிக்க நேரமில்லை.
“அம்மா.. ”
“அம்.. மா.. . இன்னைக்கு ஸ்கூல்லே. ..”
“போ.. . போ.. . வேறே வேலையில்லே உனக்கு. ..”
“இல்லேம்மா. .. இன்னைக்கு ஸ்கூல்லே.. .”
“பூனைமேலே ஆனை வந்திருக்கும்.  அதெல்லாம் கேட்க இப்போது எனக்கு நேரமில்லே. .. போ.”
“அம். .. மா டீச்சர்கூட.”
“உனக்கும் வேலையில்லே.. . உங்க டீச்சருக்கும் வேலையில்லே. போய் ஹேhம் ஒர்க்கை கவனி.”
“அதிக்கில்லேம்மா.. . லஞ்சிலே. ..”
“போ.. . அந்தக் கதையெல்லாம் டாடிகிட்டே சொல்லு. எனக்கு கேட்க நேரமில்லே…”
“அம். .மா.”
“இனிமே நீ வாயைத் திறந்தால் உதைதான் கிடைக்கும். போ வெளியே.”
தயங்கியபடி மாயா வெளியேறினாள். புனிதா சமையலில் ஆழ்ந்தாள். சமையலை முடித்து விட்டு. .. சாப்பாட்டுக் கடை முடிக்கவே மணி எட்டாகிவிடும்.  அதற்குப்பிறகு அவள் ஆபீசிலிருந்து கொண்டு வந்திருக்கும் ஃபைலைப் பார்க்க வேண்டும்.
அப்பா பேப்பரில் ஆழ்ந்திருந்தார். காலை ஆறு மணிக்கு வந்த பேப்பரை வேகமாக ஒரு புரட்டு புரட்டி விட்டு, இப்போதுதான் படிக்கத் தொடங்கியிருந்தார்.  அவர் ஆபீசில் பேப்பர் பார்க்க ஏது நேரம் ?
மாயா மெல்ல அவரை நெருங்கினாள். அவர் பேப்பரிலிருந்து முகத்தை எடுக்க விரும்பவில்லை.
“அப்பா..  இன்னைக்கு ஸ்கூல்லே.”
“பேப்பர் படிக்கும்போது தொந்தரவு செய்யாதே… ”
“இல்லேப்பா..  இன்னைக்கு என்னை ஸ்கூல்லே.. .”
“டீச்சர் குட் சொல்லித்தட்டிக் கொடுத்தாங்களா. .? பேஷ். . போ. .. போய் படி.”
“அது இல்லேப்பா. . இன்னைக்கு ஸ்கூல்லே.. .”
“நோ. . நோ. .. உங் கதை யெல்லாம் கேட்க இப்ப எனக்கு நேரமில்லே.”
“கதையில்லேப்பா.”
“சரி..  சரி. .. உங்க அக்காகிட்டே போய் சொல்லு.”
மாயா அக்காவை தேடி நகர்ந்தாள்.  அவள் ஙநடுக்காட்டு மாளிகைஙயில் ஆழ்ந்திருந்தாள். நள்ளிரவில் கறுத்த ஓர் உருவம் கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழையும் போதுதான், பாவம்; மாயாவும் உள்ளே வந்தாள்.
“மாலாக்கா. .. மாலாக்கா. .. ” மாயா மாலாவின் கையிலிருந்த புத்தகத்தைக் கீழே இறக்கி முகத்தைப் பார்த்தாள்.  புத்தகம் கீழே விழுந்ததில் மாலா காளியானாள்.  ”சனியனே நல்ல இடத்திலே வந்து புத்தகத்தைத் தட்டிவிட்டுட்டியே. ..”
“இல்லேக்கா, இன்னைக்கு ஸ்கூல்லே..”
“போ.. போ.. . எனக்கு நெறைய படிக்கணும்.”
“கொஞ்சம் கேளக்கா.. .”
“எதுவுமில்லே நீ போய் படி. . இல்லே படு. ”
அடித்து துரத்தாத தோஷம் தான் மாலா ’நடுக்காட்டு மாளிகைக்குள்’ ஆழ்ந்துவிட்டாள்.
புனிதா சமையலை முடித்து விட்டு, வியர்வையைத் துடைத்தபடி வெளியே வந்தாள்.
“மாலா” அம்மாவின் குரல் கேட்டு புத்தகத்துடன் கீழே இறங்கி ஓடி வந்தாள்.. .
“மாலா! மாயா எங்கே ?”
“நான் பார்க்கலையே… என்னவோ சொல்ல வந்தாள்…” மாலா இழுத்தாள்.
“என்னிடமும்தான்.. . சமையல் வேலை மும்முரத்திலே விரட்டிட்டேனே.. பாவம்.”
“அப்பா..  அப்பா. . மாயா எங்கே ?” மாலாதான் கேட்டாள்.  பேப்பரும் கையுமாக வந்தார் “அங்கே தானேவந்தாள். ..”
“மாயா.. .”
“மா.. யா…”
குரல்கள் வலுத்தன.  பதில் இல்லாமல் போகவே பதட்டம் அதிகரித்தது.
வீட்டின் மூலை முடுக்கெல்லாம் ஓடினர்.  சட்டென்று டெலிபோன் அலறியது.  ஓடிச் சென்று எடுத்தார் உதயமூர்த்தி.
“ஹலோ. . உதயகுமார்தான் பேசுகிறேன்.”
“நாங்க மாயா ஸ்கூல்லே யிருந்து. ..”
“என்ன குழந்தை மாயாவை ஸ்கூல்லே ஏதோ பூச்சி கடுச்சிடுத்தா.  எங்ககிட்டே சொல்லச் சொன்னாங்களா.. .? டாக்டர் கிட்டே அவசரமா கூட்டிப் போகச் சொன்னாங்களா ? தேங்க்யூ..  உடனே டாக்டர் கிட்டே போறோம்.”
டெலிபோனை வைத்துவிட்டு திரும்பினார்.  அவர் மனைவி முகத்தில் கலவரம் படர்ந்தது மாலா கையில் அந்தக் கதைப் புத்தகம் இல்லை.  தேடல் தொடர்ந்தது.
வாசல் வராந்தாமூலையில் வாடிய பூச்சரம்போல் சுரண்டு கிடந்தாள் மாயா. ஓடிச்சென்று தூக்கினாள் புனிதா.  முகம் சிவந்திருந்தது.  உடல் அனல் பறந்தது.
உடல் முழுவதும் தடிப்பு தடிப்பாக.. .
“ஐயோ, மாயாகண்ணு உனக்கென்னமா ஆச்சி ஸ்கூல்லே.. .?”
மாயா பதில் சொல்லும் நிலையில் இல்லை.
“மாயா. . மாயா..  பேசும்மா. . பேசு.. . ஸ்கூல்லே என்னம்மா ஆச்சு ?”
மாலா அலறினாள்.  மாயா பேசவில்லை.
டெலிபோனருகே ஓடினார் உதயமூர்த்தி.. . விரல் எண்களை எந்திரத்தனமாய் சுழற்றியது.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் கைப்பெட்டியுடன் உள்ளே நுழைந்தார் டாக்டர்.  பரபரப்பாகச் செயல்பட்டார் அவர்.
“நல்ல வேளை இன்னும் அரைமணி நேரம் ஆகியிருந்தால் உயிருக்கு ஆபத்துதான்.”
“கொழந்தை ஏதோ சொல்ல வந்தாள். நாங்கதான் வேலை மும்முரத்திலே. ..”
“கொழந்தைங்க சொல்றதை கேக்கறதைவிட முக்கியமான வேலையா ?”
டாக்டர் அவர்களை உரிமையுடன். கடிந்துக் கொண்டார். அவர்கள் மாயாவைச் சுற்றி ஆவலுடன் நின்று கொண்டிருந்தனர்.
மாயா கண்ணைத் திறந்து ஸ்கூலில் நடந்ததைச் சொல்ல மாட்டாளா என்று.

No comments:

Post a Comment