நான் ஒரு வங்கியில் மெசஞ்சராக இருந்தேன். பணிபுரிவோரையெல்லாம் ஒரு வடிகட்டுக்கு உள்ளாக்கியபோது எனக்கு மூட்டை கட்டிவிட்டார்கள். முதலில் எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. எல்லாவிதமான உத்தரவுகளையும் பெறுவதற்கே நான் பழக்கப்பட்டிருந்தேன். மணியடிப்புகள், இண்டிகேட்டரில் பச்சை சிவப்பு சிக்னல்கள் காட்டுதல், வாடிக்கையாளர்களின் வேண்டுகோள்கள், எவருக்காவது செய்தி சொல்லச் செல்லல் இன்னபிற. திடீரென்று ஒன்றுமில்லாமல் போய்விட்டது. கால்களை மடக்கி, கைகளைக் கட்டி, சூனியத்தை வெறித்துக்கொண்டு வரவேற்பறை சோஃபாவில் அமர்வதைத் தவிர.
ஆனால் நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட விரும்பவில்லை. செய்வதற்கு இனி ஒன்றுமில்லாமல் இருந்தது நான் வேலையில்லாமல் இருந்ததனால் அல்ல. யாரும் எனக்கு எவ்வித உத்தரவுகளும் பிறப்பிக்காததால்தான். ஒருகால் சிலர் இந்த வித்தியாசத்தைப் பார்க்காமலிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த அளவில் வித்தியாசமிருந்தது. மிகப்பெரிய அளவில்.
விளக்கிவிடுகிறேன். வேலை தேடிச்சலித்த சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் காலை படுக்கையில் படுத்துக் கொண்டு, இன்னும் தூங்குவதாக என்னை நானே ஏமாற்றிக்கொள்ள முயன்று கொண்டிருந்தபோது, என் மனவியின் குரல் என்னை குதித்து எழ வைத்தது. குரல் கோபமன தொனியில் சொல்லிக் கொண்டு இருந்தது : “ இந்த நேரத்தில் என்னதான் இந்த உலகத்தில் செய்து கொண்டிருக்கிறீர்கள் படுக்கையிலங்கே? உங்களுக்கே வெட்கமா இல்லை? நான் உடை மாற்றிக் கொண்டிருக்கிறேன். எழுந்து முகம் கழுவிவிட்டு குறைந்த பட்சம் பயனுள்ளவராக ஆக்கிக்கொள்ளுங்கள். காலை உணவைத் தயார் செய்யுங்கள் ”.
மேலோட்டமாக அவ்வார்த்தைகள் சாதாரணமானவை. முக்கியத்துவமற்றவை. ஆனால் போர்வைகளுக்குள் சுருண்டு கிடந்த என்மீது அவை முழுவதும் வித்தியாசமானதொரு பாதிப்பை ஏற்படுத்தின. நான் எனக்கே சொல்லிக் கொண்டேன். எழுந்திரு, உடைமாற்று, உன்னைப் பயனுள்ளவனாக ஆக்கிக்கொள். காலை உணவு தயார் செய். இவைகள் உத்தரவுகள். நிஜமானவை. வங்கியில் நான் பெற்றுக்கொண்டிருந்தவைகளைப் போலவே இவைகளும் தெளிவானவை. முடிவானவை. அதிகாரமிக்கவை. இவைகள் உத்தரவுகள். இவைகளினால் தூண்டப்பட்டது போல ஏதோவொன்று என் மனதிலிருந்து கால்கள்
வழியாக பயணித்தது. உடனே நான் போர்வைகளை எறிந்தேன். தரையில் பாதங்களை வைத்தேன். பாத்ரூமுக்குச் சென்றேன். கதவைத் திறந்தேன். ஷவரைத் திறந்தேன். சுருங்கச் சொன்னால், சொல்லப்பட்டதையெல்லாம் செய்தேன்.
பின் என்னை நானே உசுப்பிக்கொண்டேன். எளிமையாகத் தோன்றிய இந்த உத்தரவுகளில் மேலும் பல உத்தரவுகள் உட்குறிப்பாக இருந்ததை உணர்ந்தேன். அதாவது இரண்டாம் மூன்றாம் தரமான உத்தரவுகள். உதாரணமாக இந்த சிறிய வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம். ‘காலை உணவைத் தயார் செய்’. இந்த வாக்கியம் சொன்னது : முதலில் சமயலறைக்குப் போ. இரண்டாவது, காஸ் குக்கரை ஏற்று. மூன்றாவது, காப்பியையும் நீரையும் பாத்திரத்துள் ஊற்று. நாலாவது, ப்ரெட்டை வெட்டு. ஐந்தாவது, க்ரில்லை அடுப்பில் வை. ஆறாவது, சீனி, எண்ணெய் பாத்திரங்களோடு தட்டை தயார் செய். ஏழாவது, காப்பி பானையையும் ட்டோஸ்ட்டையும் தட்டுக்கு மாற்று. எட்டாவது, படுக்கையறைக்கு தட்டைக்கொண்டுபோய் படுக்கையில் வை.
கொடுத்த கணத்திலேயே நான் என் மனைவியின் உத்தரவைச் செயல்படுத்தா விட்டால், பல்வேறு இழைகள் பின்னிப் பிணைந்த அதன் தன்மையினால், ஒன்றன்பின் ஒன்றாக பல செயல்களைச் செய்வது கடினமாகிவிடும். அதோடு, நான் ஏற்கனவே சொல்லியபடி, இந்த இரண்டாம் தரமான உத்தரவுகள் சில மூன்றாம் தரமானவைகளை உள்ளடக்கியவை. உதாரணமாக, தட்டில் வெண்ணெயை வைப்பதென்றால், ஃப்ரிஜ்ஜிலிருந்து வெண்ணெயை எடுப்பது, அதைச் சுற்றியுள்ள தாளிலிருந்து அதை விடுவிப்பது, கத்தி கொண்டு அதை வெட்டுவது, வெட்டிய துண்டுகளை உணவில் வைப்பது இன்னபிறவும். இதெல்லாம் சொல்வது என்ன? வங்கியிலிருந்து என்னை மூட்டைகட்டி அனுப்பிய சில இயக்கமற்ற நாட்களுக்குப் பின் இயங்குகின்ற ஒரு இருப்பைக் கண்டுகொண்டேன் என்ற பிரக்ஞையை நான் மெல்ல அடைந்துகொண்டிருந்தேன் என்பதை. அப்போது நான் ஒரு ஃப்ங்ஷனரியாக இருந்தேன். இப்போது மறுபடியும் ஆகிக்கொண்டு வருகிறேன். காரணம் – வார்த்தை விளையாட்டை மன்னியுங்கள் – நான் மறுபடியும் ஃப்ங்ஷன் பண்ண ஆரம்பித்தேன்.
என் மனைவி ஒரு ஷார்ட் ஹேண்ட் டைப்பிஸ்ட். தினமும் அலுவலகம் செல்வாள். அன்று காலை அவள் எனக்கு எந்த உத்தரவும் தரவில்லை. அவள் செய்ததெல்லாம் என்னை நோக்கிக் கத்திவிட்டு ஓட்டமாகச் சென்றதுதான். “ தொலைபேசியைக் கவனித்துக் கொள்ளுங்கள். பெயர்களைக் குறித்துக்கொள்ளுங்கள்.” அது எனக்குப் போதுமானதாய் இருந்தது.
வரவேற்பறையில் அமர்ந்தேன். சோஃபாவில் காத்திருந்தேன். எதற்காக? தொலைபேசி மணி ஒலிப்பதற்காக. அந்த தொலைபேசி அழைப்புகளுக்கு நன்றிகள். இரண்டு மணி நேர இயக்கமின்மையில் இருபது அல்லது நாற்பது அல்லது அறுபது வினாடிகள் இருப்பை, அதாவது இயக்கத்தை கொடுத்தன அவை. என்னுடைய கருத்தில் இதுவே பெரிய விஷயம். அதோடு தொலைபேசி அழைப்புகள் ஒன்றுக்கு மேலிருந்தால், எனது இருப்பிற்கு ஒரு தொடர்ந்த, முறைப்படுத்தப்பட்ட குணம் கிடைத்துவிடும். இவைகளைப் பற்றி நான் யோசித்தேன். நிமிர்ந்தபோது எனக்கு எதிரில், ஜன்னலோரம் இருந்த மேஜைமேல் டைப்ரைட்டர் இருந்தது. மிஞ்சிய அலுவலக வேலை ஏதாவது இருந்தால் முடிப்பதற்கு என் மனைவி அதைப் பயன்படுத்துவாள். முக்கியமான வார்த்தைகளைக் கொண்டிருந்தும், அந்த சமயம் சப்தமின்றி, இயக்கமின்றி இருந்த அதைப் பார்த்தபோது எனக்குள் ஒரு சகோதர உணர்வு ஏற்படுவதை நான் உணர்ந்தேன். நானும் அதைப்போலவே என் மனைவி இல்லாதபோது இயக்கமற்றும் இருக்கும்போது இயங்கிக்கொண்டும் இருந்தேன்.
நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். நாம் இருவரும் சகோதர சகோதரியைப் போல.ஒரு வகையில் அந்த இயந்திரம் என்னைவிட மனிதத்தனம் மிகுந்ததாக இருந்தது. ஏனென்றால் அதற்காவது துடிப்பான, திரும்பத் திரும்ப ஒலிக்கின்ற குரலிருந்தது. நான் அனேகமாக எப்போதுமே மெளனியாகவே இருந்தேன்.
அன்று தொலைபேசி மணி ஒலிப்பு மட்டும்தான் இருந்தது. ஆனால் எந்த நேரமும் ஒருவன் உத்தரவுகள் பெறலாம் என்பதை நடைமுறையில் நான் கண்டேன். கவனம் செலுத்தினால் போதும். வாசல் மணி ஒலித்தது. எழுந்திருக்கவும். சென்று கதவைத் திறக்கவும். யார் வந்தாரென்று பார்க்கவும். இங்கே ஒரு உத்தரவிருந்தது. தெருவோரம் இரண்டு பெண்கள் உரத்த குரலில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். எழுந்து சென்று ஜன்னல் வழியாக என்ன நடக்கிறதென்று பார்க்க இங்கே ஒரு உத்தரவிருந்தது. சமையலறையில் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. குழாயை அடக்க இது ஒரு உத்தரவு. இப்படியாக. இப்படியாக.
உண்மையில் நான் சந்தோஷப்பட்டேன். ஆனால் சொட்டிக்கொண்டிருக்கும் குழாயைத் திருகி மூடுவதுதான் ஒருவனின் ஒரே வேலை என்றால் ஒருவன் வாழ முடியாது. இன்னும் முக்கியமானது தேவைப்படுகிறது. அல்லது குறிப்பிட்ட கால இடைவெளி விட்டுத் தொடர்கிற, அடிக்கடி நிகழ்கிற காரியமாயிருக்க வேண்டும். உதாரணமாக சொட்டிக் கொண்டிருக்கும் நூறு தண்ணீர் பம்ப்புகளை பத்து நிமிஷத்துக்கொருதரம் ஒவ்வொன்றையும் திருகி மூடவேண்டும். இருந்தாலும் என் மனைவி வரும்வரை ஆடாமல் அசையாமல் அமைதியாய் உட்கார்ந்திருக்கும் டைப்ரைட்டரைவிட இது எவ்வளவோ பரவாயில்லை. ஏதோ கொஞ்சம்.
அன்றிலிருந்து என் வங்கி மேனேஜரின் இடத்தை தான் பிடித்துவிட்டதுபோல என் மனைவியிடமிருந்து உத்தரவுகள் சுருக்கமாகவும், விரைவாகவும் மொத்தமாகவும் வர ஆரம்பித்தன. “ நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர். எப்போதும் நேரத்தை வெட்டித்தனமாக வீணடிப்பவர். சுய நலம். ஏதாவது உபயோகமாய் இருங்கள். சுத்தப்படுத்துங்கள். துணிகளைத் துவையுங்கள். சட்டைகளைப் பெட்டி போடுங்கள். மார்க்கட்டுக்குச் செல்லுங்கள். ஏதாவது சமையல் செய்யுங்கள்.” இப்படியாக.
தினசரி உதவுவதையும் நிறுத்திவிட்டாள். நான் வேலை இல்லாமல் வீட்டுக்கு ஏதேனும் பணம் கொண்டுவர முடியாதவனாக இருப்பதால் என்னைத் தண்டிக்க அவள் நினைக்கிறாள் என்பதாக யாரும் நினைத்திருக்கலாம். ஆனால் எனக்கு இன்பம் கொடுத்துக்கொண்டிருந்தாள் என்பதை அவள் உணரவில்லை.
என்ன சொன்னேன்? இன்பம்? அதாவது அவள் என்னை இயங்க, அதாவது இருக்க வைத்துக்கொண்டிருந்தாள். காலைகளில் அவள் எனக்குப் பிறப்பித்த உத்தரவுகளை நான் அவள் வெளியே செல்லுமுன் எழுதி வைத்தேன். பின் நாள் முழுவதும் அவைகளைப் பூரணமாக, யந்திர மயமாகச் செய்து முடித்தேன். செய்வதற்கு எந்த உத்தரவுகளுமற்ற நேரங்களில் நான் மேன்மேலும் என் இயக்கத்திற்கு அவளையே சார்ந்துள்ளேன் என்பது பிரக்ஞையில் தட்டியது. அவள், அவள் மட்டுமே, என் கைகளை, கால்களை, விரல்களை இயக்க முடியும். இதன் பின், நன்றியுணர்ச்சி, நம்பிக்கை கலந்த ஒரு தீவிரமான அன்புணர்ச்சியை நான் அனுபவித்தேன்.
இதைப்போல நாங்கள் கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழித்தோம். பின்பு, பல அடையாளங்களைக் கொண்டு, குறையற்றதாகவும் இயக்கமுடையதாகவும் தோன்றிய இந்த உறவு மெல்ல அழிந்துகொண்டு வருவதை நான் உணரத்தலைப்பட்டேன். ஏற்கனவே சொன்ன உவமானத்தைத் திரும்பச் சொல்வதானால், இது ஒரு டைப்பிஸ்ட்டுக்கும் டைப்ரைட்டருக்கும் இடையேயான உறவாயிற்று. போகப்போக, டைப்ரைட்டரில் எஞ்சும் காகிதம் போன்ற மிச்சங்களை எடுத்து சுத்தம்செய்ய வருபவனுக்கும் அதற்கும் உள்ள உறவாயிற்று.
ஒருகால் இப்படி உத்தரவுகள் தந்து என்னைத் தொல்லைப்படுத்துவதன் மூலம் என்னைத் தண்டிப்பதற்குப் பதிலாக எனக்கு ஒரு இருப்பை ஏற்படுத்த உதவுவதை அவள் உணர்ந்திருக்கலாம். ஒருகால், என்னைவிடச் சிறப்பாக அவள் உத்தரவுகளைச் செயல்படுத்தும் ஒருவனை அவள் கண்டிருக்கலாம். எப்படியோ. வெளியில் செல்லுமுன் நான் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்னவென்று சொல்வதை அவள் மறக்க ஆரம்பித்தாள் என்பதே உண்மை. எனவே மறுபடியும் என்ன நிகழ ஆரம்பித்ததென்றால், நான் அடிக்கடி வரவேற்பறை சோஃபாவில் கால்களை மடக்கி, கைகளைக் கட்டி, சூனியத்தை வெறித்துக்கொண்டு, முதுகில் சாவியும் நெஞ்சில் ஸ்பிரிங்கும் கொண்ட உண்மையான பொம்மையைப் போல இயக்கமின்றியிருக்க ஆரம்பித்தேன்.
ஏதோ ஒரு வெறுக்கத்தக்க அவசரத்தால் உந்தப்பட்டதுபோல என் மனைவி இருந்தாள். என்னோடு பேசாமலே ஆடை மாற்றினாள். அவளுக்கு மட்டும் காஃபி போட்டுக்கொண்டாள். ‘போய்விட்டு வருகிறேன்’கூடச் சொல்லாமல் அவசரமாக வெளிச்செல்லலானாள். சமயங்களில் பகல் பூராவும். சமயங்களில் இரவும்கூட வராமலிருந்தாள்.
இதற்கிடையில் எந்த தொலைபேசி அழைப்பும் கிடையாது. யாரும் வாசல் மணியை அழுத்தவில்லை. அவள் சொல்லாததால் நான் சந்தேகத்திலேயே எதையும் சுத்தப்படுத்தாமல் இருந்தேன். சாப்பிடுவதைப் பொறுத்தவரை அடிக்கடி நிகழாத, வரையறுக்கப் படாத, என் வயிற்றின் தூண்டுதல்களுக்கு நான் அடிபணிந்தேன். நான் பெற்ற ஒரே உத்தரவுகள் வயிற்றின் அழைப்புகள்தான். டப்பாவில் அடைக்கப்பட்டதை வைத்து நான் இதை சரிக்கட்டினேன்.
இப்படியாக எங்கள் வீடு நாளுக்கு நாள் அசிரத்தைக்கும் இருளுக்குமான இடமாகிப் போனது. தேய்க்கப்படாத தரை, கண்டபடி கிடக்கும் ஃபர்னிச்சர், சமையலறையில் அழுக்குப் பீங்கான்கள், க்ளாசுகள், மூலைகளில் வேஸ்ட் பேப்பர் துண்டுகள், நாற்காலிகளின் மீது துணிகள், சரிசெய்யப்படாத படுக்கைகள்என. என் மனைவிக்கு வெளிப்படையாகவே இவையெல்லாம் தெரிந்தன.
ஆனால் அவள் இதைப்பற்றியெல்லாம் சிரத்தை கொள்ளவில்லை என்று யாரும் முடிவுக்கு வர முடியும். ஆனால் இதையெல்லாம் பார்த்துவிட்டு அவள் எனக்கு ஒரு உத்தரவு தர – ஒரு வேளை – நினைத்திருக்கலாம். ஆனால் அது என்னவென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஞாயிறுகளில் ஒரு இரண்டு மணி நேரம் அவள் வீட்டிலிருந்தாள். மிகவும் சுருக்கமான முறையில் எங்கள்வீட்டின் இரண்டு அறைகளையும் அப்போது சுத்தப்படுத்துவாள்.
ஒரு நாள் காலை நான் விழித்தபோது ஏற்கனவே வெளியே செல்வதற்குத் தயாராக உடைமாற்றியிருந்த அவள், படுக்கையின் மீதிருந்த ஒரு பெட்டியை அமைதியாய் தயார் செய்துகொண்டிருந்தாள். சொருவுகளுக்கும் பெட்டிக்குமாய் அவள் சென்று வந்துகொண்டிருந்ததை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். முடிவில் இந்த வருதலையும் போதலையும் ஒரு உத்தரவாக, ஒரு கசப்பான, வேதனை தருகின்ற, என்ன நடக்கிறதென்று அவளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உத்தரவாக அர்த்தப்படுத்தினேன். எனக்குள் ஏதோ வெடித்தது. வார்த்தைகளை என் இதழ்கள் உச்சரித்தன.
“ என்ன செய்கிறாய் நீ? ”
திரும்பி என்னைப் பார்த்தாள். பின் படுக்கையில் வந்து அமர்ந்துகொண்டு சொன்னாள்.
“ டூலியோ, நாம் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் உங்களுக்குப் புரியவைக்க எல்லா வழிகளிலும் முயற்சிகள் எடுத்தேன். எனவே சொல்லி ஆகவேண்டி நிர்ப்பந்திக்கப் படுகிறேன். நம் திருமண வாழ்வுக்கு முடிவு ஏற்பட்டு விட்டது. என்னை நேசிக்கின்ற, நானும் நேசிக்கின்ற, ஒரு மனிதனை நான் கண்டுவிட்டேன். சொல்லப் போனால் கடந்த இரண்டு மாதங்களாக நான் அவரோடுதான் வாழ்ந்து வருகிறேன்.
“ என்னுடைய இருப்பு இனி இங்கே தொடர முடியாது. நீங்கள் அதைக் கவனிக்கவில்லை. ஆனால் சில கந்தல் துணிகளையும் இந்த டைப்ரைட்டரையும் தவிர எனதென்று இங்கு எதுவுமில்லை. எப்போதும் போலவே நீங்கள் இப்போதும் அன்பாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். யாரோடு வாழப்போகிறேனோ அவர் கீழே வீதியில் எனக்காக காரில் காத்திருகிறார். எனக்காக தயவு செய்து இந்த டைப்ரைட்டரை எடுத்துக் கீழே சென்று காரில் வையுங்கள். அவ்வளவுதான் நான் கேட்பது. ”
பயங்கரமானதொரு வலியை, வேதனையை நான் உணர்ந்தேன். அதன் தீவிரத் தன்மையினாலேயே, தவிர்க்கமுடியாதபடி ஒரு உத்தரவாக மாற்றப்பட வேண்டிய வேதனை. நான் சொன்னேன் :
“ ஆனால் நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது ”
அதுதான் உண்மையாக இருந்தது. அவளிடமிருந்து உத்தரவுகள் வராமல் என்னால் இருக்க முடியாது. ஆனால் என் வார்த்தைகளை அவள் பாணியில் அவள் புரிந்து கொண்டாள்.
“ துரதிருஷ்டவசமாக, நீங்கள் இல்லாமல் என்னால் நன்றாகவே வாழ முடியும் ”. அவள் பதிலளித்தாள். “ நீங்கள் உங்களை பயனுள்ளவராக ஆக்கிக்கொள்கிறீர்கள் என்பது உண்மை. ஆனால் அது மட்டும் போதாது. நீங்கள் அவசியமானவராகவும் இருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் தேவையில்லை. அழுக்கு உறிஞ்சும் யந்திரத்தையோ மின்சாரத்தில் துவைக்கும் யந்திரத்தையோ அல்லது தொலைபேசிக்கு தானாக பதிலளிக்கும் யந்திரத்தையோ உங்களுக்குப் பதிலாக நான் வைத்துக்கொள்ளலாம்.”
என்ன வேதனை ! இட்ட உத்தரவிற்கு அடிபணிந்து கொண்டிருந்த நான் சொன்னேன் : “ உன்னை நான் போக விட மாட்டேன். ”
அவள் உறுதியாகச் சொன்னாள் : “ குழந்தை மாதிரி நடந்து கொள்ளாதீர்கள். உடை மாற்றிக்கொள்ளுங்கள். டைப்ரைட்டரை எடுத்துக்கொண்டு போய் காரில் வையுங்கள். பெட்டியை நானே எடுத்து வருகிறேன். ”
நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்ததிலிருந்து முதல் முறையாக என் முன் முரண்பட்ட இரண்டு உத்தரவுகள். ஒரு பக்கம் என் வேதனை அவளைப் போகவிடாதே என உத்தரவிட்டது. மறுபக்கம் டைப்ரைட்டரைக் கீழே கொண்டுபோகச் சொல்லி அவளே உத்தரவிடுகிறாள். எதைச் செய்வது என்று சிந்திக்க ஆரம்பித்தேன். இதற்கிடையில் அவள் உத்தரவிட்டபடி உடை மாற்றிக்கொண்டேன். என் மனைவி வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தாள். பின் பெட்டியை மூடினாள். கண்ணாடி முன் சென்றாள். என் பக்கம் முதுகு காட்டி.
என்னுள் உணர்வு செயல்பட்டது. ‘ நீ என்னைவிட்டு போக முடியாது ‘ என்று சொல்லிக்கொண்டே அவள்மீது பாய்ந்தேன்.
அவள் கழுத்தைப் பிடித்தேன். எல்லாமே சுருக்கமாகவும் எளிதாகவும் தன்னிச்சையாகவும் நடந்தேறியது. திடீரென்று நொண்டியானதுபோல் என்னையே தள்ளுமளவுக்கு அவள் உடல் கீழே சரிய ஆரம்பித்ததை உணர்ந்ததும் நான் அவளை இழுத்து வந்து படுக்கையின் குறுக்கே கைகளை நீட்டி மல்லாக்க கிடத்தினேன்.
அடுத்த உத்தரவை நிறைவேற்ற நேரமாகிவிட்டிருந்தது. டைப்ரைட்டரை அதன் உறைக்குள்ளிட்டேன். ஃப்ளாட்டைவிட்டு கீழே க்ரெளண்ட் ஃப்ளோருக்கு லிஃப்டில் சென்றேன். கீழே காரிருந்தது. வாசல் கதவுக்கு எதிரில். கண்ணாடி மின்னியதால் நான் ட்ரைவரைப் பார்க்க முடியவில்லை. காரைச்சுற்றி வந்து ‘டிக்கி’யைத் திறந்து டைப்ரைட்டரை உள்ளே வைத்தேன். பின் மறுபடியும் மேலே ஃப்ளாட்டுக்கு சென்றேன்.
வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்தேன். கால்களை மடக்கி. கைகளைக் கட்டிக்கொண்டு. சூனியத்தை வெறித்துக்கொண்டு. உத்தரவுகளுக்காக காத்துக்கொண்டு.